அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியமர்த்த கூடாது; கூடுதல் டி.ஜி.பி., உத்தரவு

0
24

சென்னை: ‘அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில், பெண் போலீசாருக்கு பணி ஒதுக்குவதை தவிர்த்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பணியில், அவர்களை ஈடுபடுத்த வேண்டும்’ என, சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.

மண்டல ஐ.ஜி.,க்கள், போலீஸ் கமிஷனர்கள், டி.ஐ.ஜி.,க்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

எஸ்.பி., மற்றும் டி.ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில், கணினி கையாளுதல், தொலைபேசி அழைப்புகளை ஏற்பது மற்றும் அலுவலகம் முன் காத்திருப்பு பணிகளுக்கு ஏராளமான பெண் போலீசார் பணியமர்த்தப்படுவதாக, என் கவனத்திற்கு வந்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான, ‘போக்சோ’ வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல் நிலையங்களில் பெண் போலீசாரை உகந்த முறையில் பணியமர்த்துவது அவசியம்.

பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை மற்றும் பிற பாலின ரீதியான குற்றங்களை விசாரிப்பதிலும் மற்றும் இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான வழக்குகளை கையாள்வதிலும், பெண் போலீசாருக்கு முக்கிய பங்கு உண்டு

பெண்கள் மற்றும் குழந்தைகள் புகார் அளிக்கும் போது, அவர்கள் பாதுகாப்பான சூழலில் இருப்பதை உணரச் செய்யவும், ஆதரிக்கவும், புகார்கள் குறித்து கேட்கவும், காவல் நிலையங்களில் பெண் போலீசாரின் இருப்பு மிகவும் அவசியம்.

எனவே, மண்டல ஐ.ஜி.,க்கள், மாநகர கமிஷனர்கள், நிர்வாக பணிக்காக முகாம் அலுவலகங்களில், பெண் போலீசார் தேவையில்லாமல் பணியமர்த்தப்படுவதை தவிர்ப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். பெண் போலீசாரை, காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியமர்த்த வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, களப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

ஏற்கனவே, போலீஸ் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில், பெண் போலீசார் பணியமர்த்தப்பட்டு இருந்தால், அவற்றை மதிப்பாய்வு செய்து, தேவையான மாற்றங்களை விரைவில் செய்ய வேண்டும்.

இந்த உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை திறம்பட கையாண்டு, நம் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.