அடுக்குமாடி குடியிருப்பு வளாக கழிவறையில் புகுந்த 6 அடி நீள நாகப்பாம்பு – லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது

0
100

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்துக்குள் பொது கழிப்பறை இருக்கிறது. அதற்குள் நள்ளிரவு 1.30 மணிக்கு பெண் ஒருவர் சென்ற போது நாகப்பாம்பு ஒன்று இருந்தது.

அதை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் பாம்பு படம் எடுத்து ஆடியதால் அந்த பெண் அலறியடித்து வெளியே வந்தார். உடனே அந்த பகுதியினர் வந்து, நாாகப்பாம்பு கழிவறையை விட்டு வெளியே செல்ல முடியாதவாறு கதவை பூட்டினார்கள்.
இது குறித்த தகவலின் பேரில் உக்கடத்தை சேர்ந்த பாம்பு பிடிக்கும் ஸ்நேக் அமீன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர், அந்த பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது பாம்பு, அவரை கொத்த முயன்றது.
ஆனாலும் ஸ்நேக் அமீன், நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார். இதனால் அவரை அந்த குடியிருப்புவாசிகள் பாராட்டினர். பின்னர் அவர், நாகப்பாம்பை சாக்குப்பையில் போட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டார்.
இது குறித்து ஸ்நேக் அமீன் கூறும்போது, 6 அடி நீள நாகப்பாம்பு புகுந்தது வெஸ்டன் டாய்லெட் ஆகும். அதன் கோப்பை மூடி இருந்ததால் பாம்பு உள்ளே செல்ல வில்லை. அந்த கோப்பைக்குள் சென்று இருந்தால் யாரும் பார்த்திருக்க முடியாது என்றார்.
இதுபோன்று கோவை வடவள்ளி அருகே நவாவூர் பிரிவில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த பாம்பை பிடிக்கும் வீரர் ஒருவர் அங்கு சென்று அந்த பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. அந்த பாம்பு கொடிய விஷத்தன்மை கொண்டது ஆகும்.